அறத்தின் அடையாளம் சேவை மனிதர் சுப்பிரமணியம்

 

சுப்பிரமணியம்

சாந்தி சமூக சேவை அறக்கட்டளை சுப்பிரமணியம் குறித்த கட்டுரை.

ஓவியங்கள்: பாரதிராஜா

அறச் செயலையே பிசினஸ் போல மாற்றிவிட்ட மனிதர்கள் மத்தியில், பிசினஸைக்கூட அறமாகச் செய்தவர்... பசி போக்கவும், பிணி தீர்க்கவும், கல்வி கொடுக்கவும் தன் வருமானத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டவர்... ஒரு தொழில் நிறுவனம் மக்கள் சேவையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக தன் நிறுவனத்தை வளர்த்தெடுத்தவர்... மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க் என வழக்கமான சேவைகளைக்கூட நஷ்டமில்லாமல் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர்... சுப்பிரமணியம் இறந்தபோது கோவை மக்கள் தவித்துப்போனார்கள்.

‘’நான் எதையும் அள்ளிக் கட்டிக்கிட்டு வரலே... எல்லாமே இங்கிருந்து எடுத்ததுதான். எடுத்த இடத்துலயே கொண்டுபோய்ச் சேர்க்கிறேன்...’’ - தனது சேவைகளைப் பாராட்டுவோர்க்கு சுப்பிரமணியம் புன்முறுவலோடு சொல்லும் பதில் இதுதான். யாருடனும் அதிகம் பேசமாட்டார். உணவகத்தில் இருந்தால் பரிமாறுவார். மருத்துவமனையில் இருந்தால், நோயாளிகள் யாருக்கேனும் உதவி செய்வார். நிறுவனத்தில் இருந்தால் ஏதேனும் ஒரு இயந்திரத்தில் நின்று வேலை செய்துகொண்டிருப்பார். தனித்து அவரை அடையாளம் காணவே முடியாது. எவ்வளவு முக்கிய மனிதராயினும் தன்னைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டார். ‘’நாமதான் உதவி செய்றோம்னு எங்கேயும் காமிச்சுக்கக்கூடாது’’ என்று கண்டிப்பாக மறுத்துவிடுவார். சுப்பிரமணியம் இறந்தபோது, முகம் காட்டாமல் குனிந்தபடி அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தைத்தான் அனைவரும் பகிர்ந்தார்கள்.

பத்து ரூபாய்க்கு சேவை செய்துவிட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் உலகில், ‘சாந்தி கியர்ஸ்’ சுப்பிரமணியம் ஒரு தெய்விக உரு. ‘நான்தான் உதவுகிறேன்’ என்று வெளிக்காட்டிக்கொள்வது, உதவி பெறுவோரின் சுய மரியாதையை பாதிக்கும் என்று நினைத்த மகத்தான மனிதர். கோடி கோடியாகக் கொட்டி சேவை செய்தாலும், எவரிடமும் ஒரு பைசா நன்கொடை வாங்கியதில்லை அவர். சுப்பிரமணியம், கடந்த 11-ம் தேதி, தன் 78வது வயதில் காலமானார். கோவை மட்டுமன்றி தமிழகமே அவரது மறைவுக்காகக் கலங்கியது.

அன்றாடம் உழைத்துச் சாப்பிட நிர்பந்திக்கப்பட்ட எளிய குடும்பத்தில் பிறந்தவர். கடும் உழைப்பாலும் நேர்த்தியான திட்டமிடலாலும் கோவையின் அடையாளமாகும் அளவுக்கு ஒரு பெரும் தொழில் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். செல்வம் பெருகப் பெருக, அறத்தோடு அதை மக்களுக்கே அள்ளி வழங்கினார்.

5 ரூபாய்க்கு தரமான டிபன், 10 ரூபாய்க்கு வயிற்றையும் மனதையும் நிரம்பும் சாப்பாடு, 30 ரூபாய்க்கு மருத்துவம்... இடைநிறுத்தாமல் கடந்த 30 வருடங்களாக இந்த சேவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘சாந்தி சமூக சேவை அறக்கட்டளை’ என்ற பெயரில், தன் தொழில் நிறுவனங்களில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை மக்களுக்கு அர்ப்பணித்தார் சுப்பிரமணியம். சர்வதேச இதழ்கள் தொடங்கி உள்ளூர்ப் பத்திரிகைகள் வரை வந்து கேட்டபோதும், தன் சேவைகள் பற்றி வாய்திறந்து பேசியதில்லை. விருதுகளையும் ஏற்றுக்கொண்டதில்லை. விகடன் சார்பில் ஒரு விருதுக்காக தகவல் தெரிவித்தபோதும் புன்னகையோடு மறுத்துவிட்டார்.

சுப்பிரமணியம்

``உணவு கொடுத்தார், மருத்துவ உதவி செஞ்சார்ங்கிறதைத் தாண்டி சுப்பிரமணியம் செஞ்ச நிறைய விஷயங்கள் வெளியிலயே தெரியாது. இந்தக்காலத்துல இப்படியொரு மனிதனைப் பார்க்கிறது ரொம்பவே அபூர்வம். ஒரு தொழிலதிபரா அவரோட வளர்ச்சியும் ஆச்சர்யம் தரக்கூடியது. அவர் வாழ்க்கையில எல்லோருக்குமான பாடம் இருக்கு. டிப்ளோமா இன்ஜினீயரிங் படிச்சார். கொஞ்ச காலம் பி.எஸ்.ஜி கல்லூரியில வேலை செஞ்சுட்டு செகண்ட் ஹேண்ட் லேத் மெஷின் ஒன்றை வாங்கிப்போட்டுத் தொழிலை ஆரம்பித்தார். அவரே கியர் ஹாபிங் மெஷினை உருவாக்கினார். வங்கியில கடன் கேட்டுப் போனார். ஆறு மாசம் இழுத்தடிச்சுட்டு ‘கடன் இல்லை’ன்னு சொல்லிட்டாங்க. அவங்க மேல வழக்கு போட்டு உறுதியா நின்னு கடன் வாங்கினார். தொழில்ல மேலே வந்தார். பணம் வந்தவுடனே எல்லாருக்கும் அதை எப்படி இரட்டிப்பாக்குறதுன்னுதான் யோசனை வரும். இவர் சேவைப்பணிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க ஆரம்பிச்சார்’’ என்று நெகிழ்கிறார், ஆரம்பக்காலம் தொட்டே சுப்பிரமணியத்தை அறிந்தவரும் தொழிலதிபருமான ஏ.வி.வரதராஜன்.

சுப்பிரமணியம் ஆன்மிகத்தில் பிடிப்புள்ளவர். ஆனால் கோயில்களுக்கு உதவி கேட்டு வந்தால், ‘முடியாது’ என்று சொல்லிவிடுவார். ‘’பள்ளிக்கூடத்துக்கு உதவின்னு யார் போய் நின்னாலும், கணக்கு பார்க்காம கொடுப்பார். ஒரு வகுப்பறை கட்டிக்கொடுங்கன்னு வந்து கேட்டா, ‘மொத்தம் எத்தனை வகுப்பறை வேணும்’னு கேட்டு அதுக்கும் சேர்த்து பணம் தருவார். தமிழகம் முழுவதும் நிறைய பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டித் தந்திருக்கிறார். ஊருக்கு ரோடு போடணும்னு நிறைய பேர் போய்க் கேட்டிருக்காங்க. அவரே பணம் போட்டு நிலம் வாங்கி, ரோடு போட்டுக் கொடுத்திருக்கார். கொடுக்கணும்னு நினைச்சுட்டா அளவு பார்க்காம கொடுப்பார். ஒருமுறை நாங்க இலங்கைக்குப் போனப்போ அங்கே ஒரு நண்பர் வீட்டுல தங்கியிருந்தோம். கிளம்பும்போது, தான் போட்டிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைக் கழட்டி அவங்க வீட்டுக் குழந்தைக்குப் போட்டார். எந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாலும் வரமாட்டார். கட்டாயப்படுத்தி அழைச்சுட்டுப் போனா, கடைசி வரிசையில் போய் உக்கார்ந்துக்குவார். பல பேரோட வாழ்க்கையில அவரோட தாக்கம் இருக்கும். உன்னதமான மனுஷன்’’ என்று கலங்குகிறார் ஏ.வி.வரதராஜன்.

1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சாந்தி கியர்ஸ் நிறுவனம். முதல் தலைமுறை தொழில் முனைவோராக, சுப்பிரமணியம் தொட்டதெல்லாம் பொன்னானது. அபார வளர்ச்சி கண்ட நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுக்க நினைக்கவில்லை. விற்றுவிட்டு வெளியேற முடிவு செய்தார். அதைக் கேட்டு எல்லாத் தொழிலதிபர்களும் திகைத்தார்கள். வெளிநாட்டில் இருந்து பலர் நிறுவனத்தை வாங்க முயன்றார்கள். இறுதியில், முருகப்பா குழுமத்திடம் சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை விற்றார்.

கல்விதான் சுப்பிரமணியத்தின் முதல் இலக்கு. சிறிதும் பெரிதுமாக ஏராளமான கொடைகளை வழங்கியிருக்கிறார். வசதியில்லாத பிள்ளைகளுக்குச் சீருடைகள் வழங்குவது முதல், சம்பளம் தந்து பள்ளிக்கு ஆசிரியர் நியமிப்பது வரை நிறைய செய்திருக்கிறார். உதவிகள் செய்யும்போது பிள்ளைகளிடம், ‘’இதை நான் கடனாத்தான் தாரேன்... படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதும், இதேபோல கஷ்டப்படுறவங்களுக்கு வட்டியும் முதலுமாக உதவி செய்யணும்’’ என்பாராம் சுப்பிரமணியம். உதவியுடன் சேர்த்து அறச் சிந்தனையையும் இப்படி வளர்த்தெடுத்தார்.

‘`ஒவ்வொரு வருஷமும் இந்த வட்டாரத்துல இருக்கிற அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ரெண்டு பேரைத் தத்தெடுத்துக்குவாங்க. அவங்களுக்குப் பண உதவி உட்பட எல்லா உதவிகளும் செய்வாங்க. அவங்க செஞ்ச உதவியாலதான் படிச்சு முடிச்சு இந்த நிலைமையில இருக்கேன்’’ என்று கண் கலங்குகிறார் சூலூர், பீடம்பள்ளியைச் சேர்ந்த தியாகராஜன்.

சுப்பிரமணியம்

தொழிலில் மிகுந்த நேர்மையைக் கடைப்பிடித்தார் சுப்பிரமணியம். தங்களுடன் தொடர்பில் இருக்கும் சிறு நிறுவனங்களுக்கான தொகையை தகுந்த நேரத்தில் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரின் நிழலில் சத்தமேயில்லாமல் பல நிறுவனங்கள் வளர்ந்தன.

‘`நானும் படிப்பை முடிச்சுட்டு லேத் தொழில்லதான் இறங்கினேன். சாந்தி கியர்ஸ்லயே ஜாப் ஆர்டர் கொடுத்தாங்க. வழக்கமா மத்த நிறுவனங்களில், மூணு மாசத்துக்கு ஒருமுறைதான் பில் பணம் வரும். ஆனா, சாந்தி கியர்ஸ்ல ஒவ்வொரு மாதமும் 2-ம் தேதிக்குள்ள முந்தைய மாசத்துக்கான பில்லை செட்டில் பண்ணிடுவாங்க. நாம பில் கொடுக்க தாமதப்படுத்தினாகூட, அவங்க அழுத்தம் கொடுத்து பில் வாங்கி பணத்தைப் போட்ருவாங்க. ரெண்டாம் தேதி பணம் வந்திடும்னு நம்பிக்கையோட நாம திட்டமிடலாம்’’ என்கிறார் தியாகராஜன்.

அதிகம் புகைபிடிப்பார் சுப்பிரமணியம். நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் அதை நிறுத்தவில்லை. மனைவி இறந்தபிறகு வீட்டுக்குச் செல்வதையே நிறுத்திவிட்டார். அலுவலகத்திலேயே அவருக்கு அறை இருக்கும். அங்கு பாய் போட்டுத்தான் தூங்குவார். தன்னைப்போல கடின உழைப்பாளிகளைக் கண்டால் அவருக்கு மிகவும் பிடிக்கும். பரிசளித்து உற்சாகப்படுத்துவார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. மில் ஒன்றில் இயந்திரம் பழுதாகிவிட்டது. அந்த மில்லின் சூப்பர்வைஸர், சாந்தி கியர்ஸ்க்கு வந்து கியர் பாக்ஸ் கேட்டுள்ளார். சுப்பிரமணியமே அதை எடுத்துக் கொடுத்துள்ளார். ‘எவ்வளவு பணம் தர வேண்டும்’ என அந்த சூப்பர்வைஸர் கேட்டபோது, ``ஞாயிற்றுக்கிழமை லீவுன்னு நினைக்காம உற்பத்தி கெட்டுப்போகக்கூடாதுன்னு வந்து பொருள் வாங்குறீங்க பாருங்க... இதுக்குப் பணம் வேணாம்... உங்களுக்கு என் அன்புப் பரிசு’’ என்று நெகிழ வைத்துள்ளார்.

‘`வெளிநாடுகளில் தொழில்துறையில நடக்குற முன்னேற்றங்களைக் கூர்ந்து கவனிப்பார். புதிய இயந்திரங்களை உடனே விலை கொடுத்து வாங்கிடுவார். நிறுவனத்துல வித்தியாசம் பார்க்காம எல்லா வேலைகளையும் செய்வார். யூனியன் பிரச்னைகளில் அவரே நேரடியாப் போய் நிப்பார். ஒருமுறை அவருக்கு எதிரா ஊழியர்கள் நடத்துன ஊர்வலத்தில, அவரும் போய்க் கலந்துகிட்டார். எல்லாரும் வியந்துபோய்ப் பார்த்தாங்க. வேலையில ரொம்பவும் கண்டிப்பானவர். தவறு செய்தவர்கள்மேல நடவடிக்கை எடுக்கத் தயங்கவே மாட்டார். திடீர்னு காரை விட்டுட்டு பஸ்ஸில் அலுவலகத்துக்கு வருவார். கேன்டீன்ல எல்லாரோடவும் உக்காந்து சாப்பிடுவார். ஒரு யோகி மாதிரிதான் வாழ்ந்தார்...’’ என்கிறார் சாந்தி கியர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவரும், நன்னெறிக் கழகத்தின் தலைவருமான இயகோகா சுப்பிரமணியம்.

ஒரு கட்டத்துக்கு மேல் சுப்பிரமணியம் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டார். சாந்தி சமூகசேவை நிறுவன வளாகத்துக்குள்ளேயே தன் உலகத்தைச் சுருக்கிக்கொண்டார். கொஞ்சம் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் சேவைப் பணிகள் தொய்வு இல்லாமல் தொடர்ந்தன. ‘’யாருடைய அழுத்தத்துக்கும் பணியாதவர் சுப்பிரமணியம். நிறைய கிளப்களில் உறுப்பினரா இருந்தார். அங்கே வேலை செய்ற எளிய மக்களுக்கு அவர் உதவி செய்யப் போக, மத்தவங்க எதிர்த்தாங்க. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வெளியில வந்துட்டார். குடிசைப்பகுதிக் குழந்தைகளுக்காக ஒரு மையத்தை ஆரம்பிச்சார். காலை 8 மணிக்கு அந்த மையம் திறந்திடும். இரவு வரைக்கும் அங்கே உணவு கிடைக்கும். உடைகளும் கொடுப்பாங்க. அதுமட்டுமல்லாம சுப்பிரமணியமே அங்கே குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பார். நல்ல விஷயங்கள் கத்துத் தருவார்.

உதவின்னு வந்தா அள்ளிக் கொடுக்கிற சுப்பிரமணியம், ஒரு ரூபாய்கூட வீணா செலவு செய்ய மாட்டார். மகள் திருமணத்தைக்கூட சிம்பிளாதான் நடத்தினார். மணமக்களோட பெற்றோர் மட்டுமே கலந்துக்கிட்டாங்க. போட்டோ, வீடியோ, ரிசப்ஷன் எதுவும் இல்லை. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய நினைச்சிருந்தார். அவர் இல்லேங்கிறதை நினைச்சுக்கூடப் பார்க்கமுடியலே’’ என்கிறார் பி.எஸ்.ஜி குழுமத்தின் முன்னாள் சி.இ.ஓ.வும், சுப்பிரமணியத்தின் ஆரம்பக்கால நண்பர்களில் ஒருவருமான சி.ஆர்.சுவாமிநாதன்.

சுப்பிரமணியம் தன் கேண்டீனில் குறைந்த விலைக்கு உணவு கொடுப்பதில், கோவையில் உள்ள பெரிய உணவக உரிமையாளர்கள் சிலருக்கு வருத்தம் இருந்தது. அதை சுப்பிரமணியத்திடம் நேரடியாகவும் சொல்லியுள்ளனர். ‘`நான் குறைந்த விலையில் உணவு கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. நீங்கள் அழுத்தம் கொடுத்தால், விலையை மேலும் குறைப்பேன். நகரத்தில் பல இடங்களில் எனக்கு இடம் உள்ளது. அங்கேயெல்லாம் கேன்டீனைத் தொடங்கிவிடுவேன்’’ என்று எச்சரித்துள்ளார். எல்லோரும் அமைதியாகிவிட்டார்கள்.

மருத்துவர் கு.சிவராமன், ஆனந்த விகடனில் எழுதிய ‘உயிர்பிழை’ தொடரைத் தொடர்ந்து வாசித்துள்ளார் சுப்பிரமணியம். தொடர் முடிந்ததும் சிவராமனை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ‘`ஒரேயொரு சந்திப்புதான். பிரமித்துவிட்டேன். எந்த ஒரு வணிகரும் விலையை அதிகப்படுத்துவது குறித்துதான் சிந்திப்பார்கள். ஆனால், இவர் விலையைக் குறைப்பது குறித்துப் பேசிக்கொண்டே இருந்தார். உணவகம், மருத்துவமனை என அவர் செயல்படுத்திய திட்டங்களையும் விதங்களையும் பார்த்து வியந்துபோனேன். அவர் நடத்திய உணவகத்தைப் பார்த்தேன். விலை குறைவாகக் கொடுப்பதற்காக தரமற்ற பொருள்களை அவர் வாங்கவில்லை. அதிக விலையுள்ள அரிசியில் சமைப்பதைப் பார்த்தேன். நெய், எண்ணெய் உட்பட அங்கிருந்த அனைத்துப் பொருள்களும் தமிழகத்தின் டாப் பிராண்டுகள். காபி குடித்த டம்ளர்களைக் கழுவ, அவரே டிசைன் செய்து ஒரு பிரத்யேக இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

அவரது மருத்துவமனையில் 50 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினால், அடுத்து மூன்று முறை வரும்போது காசு வாங்க மாட்டார்கள். குறைந்த விலையில் கண் கண்ணாடி கொடுக்க, ஜெர்மனியில் இருந்து ஓர் இயந்திரத்தை வாங்கியுள்ளார். அவரது அறையைப் பார்த்தேன். சிலிர்ப்பாக இருந்தது. மிகவும் சிறிய அறை. 150 சதுர அடிகூட இருக்காது. அறை முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருந்தன. ஒரு எழுத்து மேஜை, ஒரு படுக்கை. ‘இது போதும்ங்க எனக்கு’ என்று சிரித்தார். எனக்கு ஒரு புத்தகம் தந்தார். ‘புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ‘நான் செய்கிற வேலை வெளியில் தெரியக்கூடாது. அதனால், யாருடனும் படம் எடுப்பதில்லை’ என்று மறுத்துவிட்டார். உழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தோன்றும். அதை சக மனிதனுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. சுப்பிரமணியம் வாழ்க்கை எல்லோருக்கும் மிகப்பெரிய அனுபவப் பாடம்’’ என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.

சுப்பிரமணியம் மனைவி மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார். காதல் திருமணம்தான். மனைவியும் மற்றவர்களுக்கு உதவும் மனநிலை கொண்டவராக அமைந்தது வரம். அதனால் எந்தத் தடையும் இல்லாமல் பணிகள் தொடர்ந்தன. மனைவி இறந்தபிறகு முழுமையாக சேவையில் தன்னைக் கரைத்துக்கொண்டார். தனது மகள்கள் கஷ்டம் உணர்ந்து வளர வேண்டும் என்பதற்காக, கல்லூரிக்குப் பேருந்தில் அனுப்பிப் படிக்க வைத்தார்.

நலமாக இருந்தகாலம் வரை ஊழியர்களை அடிக்கடி சந்தித்துப் பேசுவார் சுப்பிரமணியம். ஒருமுறை பேசும்போது, ‘நான் இறந்துவிட்டால் அன்று யாரும் நேரில் வரக்கூடாது. அன்றைய தினம் வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டும். அதுதான் எனக்குச் செய்யும் மரியாதை’ என்று கூறியிருக்கிறார். ஊழியர்கள், ஓரு நல்ல வழிகாட்டியை இழந்துவிட்ட வேதனையில் தவிக்கிறார்கள்.

அறத்துக்கும் கருணைக்கும் அடையாளமாக வாழ்ந்திருக்கிறார் சுப்பிரமணியம். அவர் பெயர் காலத்தில் நிலைத்திருக்கும்!

Post a Comment

0 Comments