பள்ளிகளின் பாராட்டும் மாணவர்களின் நெகிழ்ச்சி தரும் அனுபவமும்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்—வலிவலம், ஆதமங்கலம், கீரங்குடி, கொடியாளத்தூர் மற்றும் தென்மருதூர்—எனும் ஐந்து பள்ளிகளிலும், நமது கல்வி மரம் அறக்கட்டளையின் "நலமுடன் நமது பள்ளி" திட்டத்தின் கீழ் ,RO நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் (RO Water Purifier System) நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுகின்றனர்.

இந்த மாற்றத்தை கொண்டாடும் வகையில், ஐந்து பள்ளிகளும் இணைந்து ஒரு பாராட்டு விழா நடத்தின. விழா மிகச் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. நாங்கள், கல்வி மரம் அறக்கட்டளை நிர்வாகக் குழுவினர், அந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் நேரில் பேசும் வாய்ப்பைப் பெற்றோம்.









விழாவின் சிறப்பு விருந்தினராக கீழ்வேளூர் வட்டாரக் கல்வி அலுவலர் உயர் திரு. . சுப்பிரமணியன் M.A , B.Ed, M.L. அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி, நமது திட்டங்களை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார். நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊரார் அனைவரும் நமது சேவையை மனமுவந்து பாராட்டினர்.

விழா முடிந்த பிறகு, பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் நாங்கள் நேரடியாக உரையாடினோம். ஒரு வாரமாக RO சுத்திகரிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் எப்படி அதை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிய அவர்களின் கருத்துக்களை கேட்டோம். அப்போது ஆசிரியர்கள் கூறிய மாணவர்களின் சில வார்த்தைகள் நம்மை உண்மையிலேயே நெகிழ வைத்தன:

  • கல்யாணத்தில் குடிக்கிற மினரல் வாட்டர் மாதிரி இருக்கு டீச்சர்!
  • தண்ணி நல்லா இருக்கு டீச்சர்... எங்க அம்மாவுக்கு கொஞ்சம் எடுத்துக்கிட்டு போலாமா?

இந்த சொற்கள் எங்கள் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் பலமடங்காக உயர்த்தின.

விழா முடிந்து, அருகிலுள்ள உணவகத்தில் மதிய உணவு உண்டோம். சாப்பாட்டிற்குப் பணம் கொடுக்க முயன்றபோது, உணவக உரிமையாளர் பணம் வாங்க மறுத்தார். ஏற்கனவே அதற்கான கட்டணம் விழாவில் பங்கேற்ற பெற்றோரால் செலுத்தப்பட்டிருப்பது நம்மை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. நாங்கள் பணத்தைத் திருப்பிக்கொடுக்க முயன்றபோதும், அந்த பெற்றோர் ஒருவர் சொன்னார்:

நீங்க எங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கு இத்தனை நல்ல விஷயங்கள் பண்ணீங்க... இது என்னால முடிந்த சின்ன மரியாதை தான்!

அந்த வார்த்தைகளும் அவர்களது செயலும் நம்மை ஆழ்ந்த மனநிறைவை கொடுத்தது.
வயிறும் நிறைந்து, மனமும் நிறைந்து, ஒரு புதிய நம்பிக்கையுடன் திருவாரூருக்கு திரும்பினோம்.

இது போன்ற அனுபவங்கள், நம்மை மேலும் பல பள்ளிகளுக்கு நன்மை செய்ய ஊக்கப்படுத்துகின்றன. "நலமுடன் நமது பள்ளி" என்பது ஒரு திட்டம் மட்டுமல்ல... ஒரு சமூக மாற்றத்தின் விதை.

👉Support Our initiatives


Post a Comment

0 Comments